நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றில் அந்த்ய புஷ்கர விழா நேற்று தொடங்கப் பட்டது.  காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்குகொண்டு, புனித நீர் ஊற்றி விழாவை தொடங்கி வைத்தார் தொடக்கம்:

திருநெல்வேலி குறுக்குத்துறை தீர்த்தகட்டத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி  சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தாமிரபரணி நதிக்கு பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்ததை முன்னிட்டு, தாமிரபரணி அந்த்ய புஷ்கரம் நிறைவு விழா  தாமிரபரணி கரையோர தீர்த்தக் கட்டங்களில் நேற்று தொடங்கியது. வரும் 6-ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று  திருநெல்வேலி குறுக்குத்துறை தீர்த்தக் கட்டத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பூஜைகள் செய்தார். இந்த விழாவில்,  அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் பங்கேற்றனர்.

இதுதவிர ஜடாயு தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புஷ்கர நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் நீராட படித்துறைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.