திருச்செந்தூர்:

ந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை  நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரர்த்திற்க பிரசித்த பெற்ற திருச்செந்தூரில் நடைபெறற சூரசம்ஹாரத்தைக் காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அலைகடலென குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் இன்று மாலை சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது.

இன்று பிற்பகல் வரை யாகசாலை பூஜை நடைபெறுகிறது. அங்கிருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைகிறார்.

பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம்,தீபாராதனை நடைபெறும்.

அதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.

முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார்.

இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொள்கிறார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார்.

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. கடற்கரை மணல் சமப்படுத்தப்பட்டு, கடலோரத்தில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டன.

சூரசம்ஹாரா நிகழ்வை காண்பதற்கு 7 இடங்களில் அகன்ற  எல்.இ.டி., டிவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை, கோவில் வளாகம் மற்றும் நகரின் பிரதான வீதிகளில் 45 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பிநாயர் பட்டர் பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில் ஸ்தானிகப்பட்டர், சுப்பிரமணியசுவாமிக்கு நவரத்தின சக்திவேலை அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில் சூரசம்ஹார விழா கடந்த 28ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.நேற்றிரவு ஆலயத்திற்குள் எழுந்தருளிய முருகன் அன்னை வேல்நெடுங்கண்ணி இடம் சக்தி வேல் பெற்றபோது முருகனின் சிலை முழுவதும் வியர்வைத்துளிகள் ஏற்பட்டது.

திருவாரூர் கீழரத வீதியில் அமைந்துள்ள பழனியாண்டவர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மூலவர் பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சண்முகர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.