டெல்லி: ஜம்முகாஷ்மீரில் தற்போதுள்ள நிலவி வரும் சூழ்நிலை நல்லதல்ல, நிலையானதும் அல்ல என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியிருக்கிறார்.
2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்தார் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளிடையே வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன்பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது: இந்த ஒப்பந்தங்கள் வழியே எந்தளவுக்கு இந்தியாவுடன், ஜெர்மனி இணைந்து செயலாற்றுகிறது என்பது நன்றாக தெரிந்திருக்கும்.
டிஜிட்டல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அபாரமானது. அது சவாலான ஒன்று. நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மென்மேலும் வளரும்.
ஜெர்மனியில் இந்திய நாட்டைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் படிக்கின்றனர். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பயிற்சி என்று வரும் போது, ஆசிரியர்கள் பரிமாற்றம் வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
கலாச்சார பரிமாற்றம், இரண்டு நாடுகளின் மக்களையும் ஒன்றிணைக்கும். இந்திய கலாச்சாரம் ஜெர்மனியில் இல்லை. அது இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
ஜம்முகாஷ்மீரில் தற்போதுள்ள நிலவி வரும் சூழ்நிலை நல்லதல்ல, நிலையானதும் அல்ல. அந்த நிலையில் நிச்சயம் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றார்.