டெல்லி

டெல்லியில் தற்போது வரலாறு காணத அளவில் காற்று மாசு அதிகரித்து உள்ள நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியம் அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவித்து உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் கெஜ்ரிவால் பள்ளிக் குழந்தைகளுக்கு மூகமூடி வழக்கினார்.

இந்தியாவிலேயே அதிக காற்று மாசு உள்ள மாநிலம் டெல்லி என்பது  அனைவரும் அறிந்ததே. அங்கு வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தற்போது அங்கு வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது.  காற்று மாசு குறியீட்டின் அளவு உச்ச பட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது.

தொடர்ந்து 450 புள்ளிகளுக்கு மேல் காற்றின் மாசு 48 மணிநேரம் நீடிப்பதால்  மக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்படும் சூழல் எழுந்துள்ளது.இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொது சுகாதார அவசர நிலையை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை நேரத்தில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்குச் செல்பவர்கள், உடற்பயிற்சி செல்பவர்கள் அதைப் புறக்கணித்தனர். சாலையில் செல்வோர் பெரும்பாலான மக்கள் முகத்தில் முகமூடி அணிந்தும், சுவாச முகமூடி அணிந்தும் செல்கின்றனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும 5-ம் தேதிவரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பள்ளிக்குழந்தைகளை சுவாச முகமூடிகளை வழங்கினார். அப்போது, டில்லி நகரத்தை  “எரிவாயு அறை” என்று கூறியவர், அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களையும் அவர் குற்றம் சாட்டினார். அங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள்  விளைந்த பயிர்களின் மிச்சமான வைக்கோல் போன்றவற்றை  எரிக்கின்றனர், இதனால் வட இந்தியா முழுவதும் புகை மூட்டங்கள் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கூறிய  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  முதல்வர்  கெஜ்ரிவால் நகர மாநிலத்தில் மாசு அளவு அதிகரித்து வருவதற்காக,  பஞ்சாப் மற்றும் அரியானாவைக் குறை கூறுவது பிரச்சினையை தீர்க்காது என்றார். “பஞ்சாப் மற்றும் அரியானாவைக் குறை கூறுவதற்குப் பதிலாக, ஐந்து மாநிலங்களில் (டெல்லிக்கு அருகில்) தொழில்களால் உற்பத்தி செய்யப்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி கவனத்தில் கொள்வார் என்று தெரிவித்தார்.

காற்றின் தரம் குறித்த குறியீடு

காற்று தரக் குறியீட்டின்பட், 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது,

51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது,

201-300 புள்ளிகள் இருந்தால் மோசம்,

301-400 வரை இருந்தால் மிக மோசம்,

401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம்,

500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகத்தீவிரம் அல்லது நெருக்கடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில்ல நேற்று நள்ளிரவு 582 புள்ளிகளைத் தொட்டு இன்று காலை முதல் டெல்லியில் 450 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறிய டில்லி துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா, ” காற்று மாசு அதிகரிக்கும்போது, தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு இதேபோன்ற சூழல் நிலவியபோது, பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை விடப்பட்டது” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே காற்று மாசில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு 50 லட்சம் மாஸ்க்குகளை மாநில அரசு இன்று காலை முதல் வழங்கி வருகிறது.