மும்பை: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, திட்டமிட்டபடி டெல்லியிலேயே நடக்குமெனவும், இதில் மாற்றமிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
“டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பல்வேறு இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, இந்த இறுதி நிலையில், முடிவுகளை மாற்றுவதற்கான சாத்தியமெல்லாம் கிடையாது. எனவே, திட்டமிட்டபடி போட்டி அங்குதான் நடக்கும். வேண்டுமானால், எதிர்காலத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து பரிசீலிப்போம்” என்றார் கங்குலி.
டி-20 கேப்டனாக களமிறங்கும் ரோகித் ஷர்மா கூறியதாவது, “இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியின்போது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நாங்கள் சாதாரணமாகத்தான் இருந்தோம். இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது பெருமைக்குரியது.
அது எத்தனை போட்டிகள் என்பதெல்லாம் விஷயமல்ல. எதுவும் நம் கைகளில் கிடையாது. கொல்கத்தாவில் நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இளஞ்சிவப்பு நிறப் பந்தில் விளையாடிய அனுபவம் ஏற்கனவே உள்ளது” என்றார்.