புதுடெல்லி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி), தனது சமீபத்திய அறிவிப்பில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிடமும் (ஹெச்இஐ) காதி மற்றும் கைத்தறிப் பொருள்களைப் பட்டமளிப்பு விழா மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து துணைவேந்தர்களுக்கும் எழுதிய கடிதத்தில், கைத்தறிக்குப் புத்துயிர் தர பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் செயல்படுமாறு யுஜிசி கேட்டுக் கொண்டது.
காதியை ‘சுதந்திரத்தின் அடையாள உடை‘, என்றழைத்த யுஜிசி, பல்கலைக்கழகங்களை இந்த திசையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டது. “காதி மற்றும் காதி கட்டின்ஸ் (ஸ்பின்னர்கள்) மற்றும் பங்கர்கள் (நெசவாளர்கள்) ஆகியோரின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக சடங்கு ஆடைகளுக்கு காதி அல்லது கைத்தறி துணியை ஏற்றுக்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்கவும்” என்று அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
“காதி மற்றும் பிற கைத்தறிப் பொருட்களின் பயன்பாடு இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்வது மட்டுமல்லாமல், வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு மிகவும் வசதியாக இருக்கும்”, என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் துணி ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதையும் அந்த கடிதம் எடுத்துக்காட்டுகிறது. “மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது கையால் நூற்கப்பட்ட கைத்தறி துணியான காதியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்,” என்று அது மேலும் கூறியது.
“காதி மற்றும் கைத்தறி துணி நமது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குவது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது“, என்றும் அக்கடிதம் குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு நடவடிக்கையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை தங்கள் ‘பிரிட்டிஷ் கலாச்சாரத்தால் தூண்டப்பட்ட‘ பட்டமளிப்பு விழா உடையை பாரம்பரிய இந்திய ஆடைகளுடன் பண்டமாற்று செய்து மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டது. “நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்,
பிரிட்டிஷ் கலாச்சாரத்தால் தூண்டப்பட்ட ஆடைகளுடன் அவர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதை விட, அவர்கள் பாரம்பரிய இந்திய ஆடைகளுடன் செல்ல வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு வடிவமைப்பு விருப்பங்களைக் கொண்டு வருமாறு கேட்கலாம் அல்லது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சில வடிவமைப்புகளையும் குறிப்பிடலாம் ”,என்று அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பல்கலைக்கழகங்களுக்கு வீடியோ செய்தியில் கூறியிருந்தார்.