மும்பை: எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கே மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதால், எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும், பா.ஜ. மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் கூறியுள்ளார்.
மராட்டிய சட்டமன்ற தேர்தலில், காங்கிரசைவிட, தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளது. பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைக்கும்பட்சத்தில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்.
சிவசேனாவுக்கு சரத்பவார் கட்சி ஆதரவு என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நிருபர்களை சந்தித்த பிரஃபுல் படேல் கூறியதாவது, “எங்களுக்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பு எதிர்க்கட்சியாக செயல்படத்தான்.
எனவே, அதனை மதித்து செயல்பட விரும்புகிறோம். பா.ஜ. மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம் இல்லை. ஆட்சி அதிகாரத்தின மீது எங்களுக்கு ஆசை இல்லை. எதிர்க்கட்சியாக எங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்” என்றார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சரத்பவாரின் உறவினரும், மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவருமான அஜித் பவார் தேர்வுசெய்யப்பட்டார்.
மராட்டியத்தில் அரசமைப்பது தொடர்பாக பாரதீய ஜனதா – சிவசனோ கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.