டில்லி

காஷ்மீரைக் காண வரும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவுக்கு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 மூலம் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு அந்தப் பகுதி இரு யூனியன்பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பலர் வீட்டுக் காவலில் உள்ளனர்

இன்று ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் குழு காஷ்மீர் சென்று அங்குள்ள நிலையை நேரில்  பார்வையிட உள்ளது.  இது குறித்து மெகபூபா முப்தியின் டிவிட்டரில் அவர் மகள் இல்திஜா மூலம் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த பதிவுகளில்,”ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினர் உள்ளூர் மக்கள், ஊடகம், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்திப்பார்கள் என நம்புகிறேன்    இதன் மூலம் காஷ்மீருக்கும் உலகத்துக்கு இடையில் உள்ள இரும்புத் திரை நீக்கப்படும் என நம்புகிறேன்.  இந்திய அரசு தற்போது காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தற்போது ஐரோப்பிய குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி ஏன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளிக்கவில்லை?  இந்திய அரசு இந்த பகுதியில் இயல்பு நிலை உள்ளது என நிரூபிக்க இவர்களை அழைத்துள்ளது என்பதில் ஐயமில்லை.

இந்தக் குழுவினர் ஏன் தற்போது காவலில் உள்ள மூன்று முன்னாள் முதல்வர்களான என்னையும், ஃபரூக் அப்துல்லாவையும் உமர் அப்துல்லாவையும் சந்திக்கக் கூடாது?    இந்த குழுவினர் நிலைமை சாதாரணமாக உள்ளது என அறிவித்தால் எங்களை விடுதலை செய்து இணைய சேவையை அளிக்க வேண்டும்.   நிலைமை சீராக இல்லை என்றால் அது இந்திய அரசுக்கு அவமானம் ஆகும்

விதி எண் 370 விலக்கப்பட்டதன் மூலம் இந்தியக் கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் வந்து விட்டது என்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் காஷ்மீருக்குள் வரத் தடை செய்யப்பட்டுள்ளது?  ஆனால் வலதுசாரி ஆதரவான ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு அனுமதிக்கப்பட்டுள்ளது.  அந்தக் குழு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு கொண்ட குழு என்பதால் மட்டுமே ஆகும்.” என தெரிவித்துள்ளார்.