சென்னை
ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த சுஜித்துக்கு மு க ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காப்பட்டி என்னும் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்று இருந்துள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் வில்சன் தவறி விழுந்தான். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்புக் குழுவினர் பல வழிகளில் முயன்றனர். இந்த பணிகளைச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் நேரில் கண்டனர்.
இன்று அதிகாலை சுஜித் 80 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் கடும் துயரத்தை அளித்தது. சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் டிவிட்டரில், “நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான்.
சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! ” என்று பதிந்துள்ளார்,