ஆழ்துளையில் விழுந்து 80 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை, கடந்த நான்கு நாட்களாக மீட்கும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து மீட்பு பணிகளில் பின்னடைவு, கருவிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக 80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் மீட்பு பணிகள் வெற்றியடையவில்லை. குழந்தை சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட சுர்ஜித்தின் உடல், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவுற்ற நிலையில், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுர்ஜித்தின் உடல் நேராக ஆவாரம்பட்டி புதூர் பகுதியில் உள்ள பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுதுக்கொண்டிருக்க, மக்களின் அஞ்சலிக்காக உடல் 1 மணி நேரம் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது சுர்ஜித்தின் உடல் கல்லறையில் தோண்டப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.