சென்னை: இனி கேம்பஸ் இண்டர்வியூ எல்லாம் கிடையாது, ஆன்லைன் டெஸ்ட் தான் என்று பல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் களத்தில் குதித்து பணியாளர்களை தேர்வு செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

பொதுவாக, கல்வி நிலையங்களுக்கு படையெடுக்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூ எனப்படும் வளாக நேர்காணல் மூலம் ஆட்களை பணி அமர்த்தி வந்தன.

இதுபோன்ற ஒரு வசதி எங்கள் கல்லூரியில் இருக்கிறது என்று விளம்பரப் படுத்தி, தங்களின் கல்வி தரத்தை பறைசாற்றியதை பார்த்திருப்போம். ஆனால், தற்போது அந்த நடைமுறையை உடைத்திருக்கின்றன பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்.

வளாக நேர்காணல் என்பதை முற்றிலுமாக மாற்றி, ஆன்லைன் டெஸ்ட் என்ற முறையை புகுத்த தொடங்கியிருக்கின்றன. அதன் பிறகு தேர்வு செய்யப்படும் நபர்களை சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நேர்காணல் நடத்தி பணியமர்த்துகின்றன.

இது குறித்து கிண்டி அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் தியாகராஜன் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனம் நடத்திய ஆன்லைன் டெஸ்டில் 12,000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1,600 பேரை தேர்வு செய்திருக்கின்றோம். நேர் காணலுக்கு பிறகு 778 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நடைமுறையால் நேரம் மிச்சமாகிறது என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கூடுதல் இயக்குநர் கலைச்செல்வன் கூறியதாவது: இந்த ஆண்டு நிறைய நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரகளை ஆன்லைன் டெஸ்டில் மாணவர்களை தேர்வு செய்ய அணுகியிருக்கின்றன.

அதன் பிறகு, அவர்களில் யார்,யார் தேர்வானவர்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் நேர்காணலுக்கு அழைத்து, தகுதி உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது.

சில முன்னணி நிறுவனங்கள் நேர்காணல் உள்பட அனைத்தையும் ஆன்லைனிலே நடத்தி முடிக்கின்றன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இந்த நடைமுறையை கடைப்பிடிக்கின்றன.

இதுபோன்ற ஆன்லைன் டெஸ்ட்டுகள் மாணவர்களுக்கு சவுகரியமாக இருக்கின்றன. அவர்களுக்கு ஏற்ற, பொருத்தமான நேரத்தில் எவ்வித டென்ஷனும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்கின்றனர் என்றார்.

இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர் சிதம்பர ராஜன் கூறியிருப்பதாவது: முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்த முறையை பின்பற்ற தொடங்கியிருக்கின்றன. இதில் யாரும், யாரையும் ஏமாற்றியோ, முறைகேடு செய்தோ வெற்றி பெற முடியாது.

ஏன் என்றால் கணினி தொடுதிரை முன்பு அமரும் மாணவர் சில நிமடங்களில் அதன் முன்பு இல்லாமல் இருந்தாலோ, வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ கண்விழித்திரை மூலம் தெரிந்துவிடும். வேறு ஏதேனும் பிரவுசர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டால், தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

 

 

[youtube-feed feed=1]