3வது முறையாக தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் சிக்கியுள்ளான். அவனை மீட்பதற்கான பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு ரிக் இயந்திரம் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், அந்த இயந்திரம் பழுதானதால், புதிதாக ராமநாதபுரத்தில் இருந்து மற்றொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புதிய ரிக் இயந்திரத்தின் மூலம் துளையிடப்பட்டு வந்த நிலையில், இரு முறை ரிக் இயந்திரம் பழுதடைந்திருந்தது. அதனை சரி செய்து உடனடியாக பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தின் போல்டு சரியாக இல்லாததால், அதை மாற்றி பழுதை சரி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது வரை 45 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.