டில்லி:

திகார் சிறையில் இருந்து நேற்று விடுதலையான கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை  சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உடன் டி.கே.சிவகுமார்

அதைத்தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்து பேசினார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது, ஹவாலா முறையில் கோடிக்கணக் கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு டில்லி உயர்நீதி மன்றம் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. முன்னதாக திகார் சிறையில் நேற்று முன்தினம் காலை சோனியா காந்தி சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று ஆறுதல் கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே உடன் டி.கே.சிவகுமார்

இதைத்தொடர்ந்து, சுமார் 51 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு நேற்று  திகார் சிறையில் இருந்து டி.கேசிவகுமார்  சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இன்று காலை டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வந்த டி.கே.சிவகுமார், அங்கு   காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவையும், அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.