டில்லி:
மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்182 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி 91 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாரதிய ஜனதா கூட்டணி அதிக தொகுதிகள் வரை முன்னிலை வகிப்பதால் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அரியாணா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 14 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மகாராஷ்டிரா:
ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் என மொத்தம் 288 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 182 இடங்களில் இந்த கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
எதிர்க்கட்சிக் கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் என மொத்தம் 268 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இதில் 87 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.