ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டுள்ளது. இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு இன்னும் 2 தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளே தேவை.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, இரண்டாம் நாள் கடைசியிலேயே தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இரண்டாம் நாளில் 5 ஓவர்களே பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
மூன்றாம் நாளில் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா, ஏதோ சொல்லிவைத்து விளையாடியதுபோல் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஹம்சா மட்டுமே அரைசதம் அடித்தார்.
மொத்தம் 162 ரன்களுக்கெல்லாம் முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டு 335 ரன்கள் பின்தங்கியது தென்னாப்பிரிக்கா. ஆனால், இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்து அந்த அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது.
ஏற்கனவே மனதளவில் நொந்து போயிருந்த அந்த அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ஆகிப்போனது நிலைமை.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்ற கேள்வியுடன் ஆடத்தொடங்கிய தென்னாப்பிரிக்கா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் டி புருயன் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா தரப்பில் ஒட்டுமொத்தமாக இதுவரைப் பார்த்தால், ஷமி 5 விக்கெட்டுகளையும், உமேஷ் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளர். இரண்டு இன்னிங்ஸிலும் தலா 1 ரன்அவுட் கிடைத்துள்ளது.