2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஜா புயல் தாக்கத்தால் பலரது வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. இதனால் பல குடும்பங்கள் வீடுகளின்றித் தவித்தன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தினரைத் தேர்வு செய்த ரஜினி மக்கள் மன்றம். அதில் 10 குடும்பங்களுக்குத் தனது சொந்த செலவில் வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடிவு செய்தார் ரஜினி. இதற்கான பூமி பூஜை மார்ச் மாதத்தில் போடப்பட்டது.
நாகப்பட்டினம் ரஜினி மக்கள் மன்றச் செயலாளரான டி.எல்.ராஜேஷ்வரன் இதற்கான பணிகளைக் கவனித்து வந்தார். வீடு கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட 10 குடும்பத்தினரிடம் வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார் ரஜினி.வீடுகளுக்கான குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் அடங்கிய பையுடன் சாவியைக் கொடுத்தார்.