தியோபாண்ட், உத்தரப்பிரதேசம்
அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு தீபாவளிக்கு முன்பு தங்கம் வாங்குவதற்கு பதில் வாள் வாங்க பாஜக தலைவர் கஜராஜ் ராணா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட இந்தியாவில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முதல் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தன்று அனைவரும் தங்கத்தால் ஆன ஆபரணங்கள் அல்லது உலோக பாத்திரங்கள் போன்றவற்றை வாங்குவது வழக்கமாகும். இந்த வருடம் வரும் 25 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று தாந்திரியாஸ் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி உத்தரப்பிரதேச பாஜக தலைவர்களில் ஒருவரான கஜராஜ் ராணா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜராஜ் ராணா, “தற்போது உச்சநீதிமன்றம் அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கு விசாரணையை முடித்து விட்டது. விரைவில் இது குறித்த தீர்ப்பு வர உள்ளது. அனேகமாக அந்த தீர்ப்பு ராமர் கோவிலுக்கு ஆதரவாக வரும் என நாம் நம்புகிறோம். ஆனாலும் தற்போதுள்ள சூழலில் நம்மைக் காப்பாற்றிக் கொள்வது அவசியமானதாக உள்ளது.
எனவே நமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைவரும் வாள் வாங்கிக் கொள்வது நல்லதாகும். தாந்திரியாஸ் பண்டிகைக்குத் தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் வாங்குவதை நிறுத்தி விட்டு மக்கள் அனைவரும் இரும்பினால் செய்த வாள்கள் வாங்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். அந்த வாள் மூலமே நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.
நான் இவ்வாறு சொல்வது மத கோட்பாடுகளுக்கு எதிரானது இல்லை. நமது இறைவன் மற்றும் இறைவியர் ஆயுதங்களை வைத்துள்ளனர். நாம் ஆயுதங்களை வணங்குகிறோம். நான் தற்போதுள்ள சூழலுக்காக எனது சமுதாய மக்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திரமோகன், “கஜராஜ் பேசியது போன்ற வார்த்தைகளை பாஜக என்றும் ஆதரிக்காது. அவர் கூறியவை அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்தாகும். ஒவ்வொரு தலைவரும் எவ்வாறு பேச வேண்டும் என ஒரு வழிமுறை உள்ளது. அதற்கு எதிராக யாரும் நடக்கக்கூடாது. யாராக இருப்பினும் கட்சியின் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.