சென்னை:
நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாங்குனேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தன்னிடம் மனு அளிக்க வந்த முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கோரியும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 16-ம் தேதி இரவு நாங்குநேரி தொகுதியில் நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் வந்து ரேஷன் கடையை பிரித்து தர வேண்டும் என என்னிடம் கேட்டனர். அதற்கு நீங்கள் தாசில்தாரிடம் மனு கொடுங்கள். அதன் நகலை என்னிடம் கொடுங்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், அவர்கள் ரேஷன்கடையை பிரித்து தர முடியுமா, முடியாதா என்பதை இப்போதே சொல்லுங்கள் என்றனர். அவர்கள் பேச்சு சரியில்லாததால் நாளைக்கு வாருங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.
ஆனால் நான் இஸ்லாமிய சமுதாயத்தை தவறாக பேசியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். இது தொடர்பாக காதர் முகைதீன், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்றவர்கள், உண்மை தெரியாமல் என்னை கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர். சிறுபான்மையினரது ஓட்டுகள் அதிமுக பக்கம் திரும்பியிருப்பதால், அந்த ஓட்டுக் களை திமுக பக்கம் திருப்பவே என்னை பற்றி இந்த பொய் தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதனை இஸ்லாமிய மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.