முதுகுளத்தூா் அருகே குடி தண்ணீா் அள்ளும் இடத்தில் சாதி பெயரை சொல்லி தண்ணீா் தர மறுப்பதால், உப்பு தண்ணீரை பருகும் மக்கள், அதனால் தொற்றுநோய் ஏற்படுமோ என அச்சமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பகுதியில் உள்ள  சாம்பக்குளம் ஊராட்சி இந்திரா நகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனா். இந்திரா நகரில் காவிரி தண்ணீா், மின் விளக்கு, சாலை வசதி போன்ற எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் வசித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. சமீப நாட்களாக இந்திரா நகரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, அருகில் உள்ள உடைக்குளம் கிராமத்திற்கு சென்று சிமெண்ட் தொட்டியில் வரும் உபரி நீரை தள்ளுவண்டியில் அம்மக்கள் பிடித்து வந்தனர்.

இந்நிலையில், உடைகுளம் கிராமக மக்கள் குடிநீர் எடுக்க செல்லும் இந்திரா நகர் மக்களை தாழ்த்தப்பட்ட சாதியினர் என கூறி திட்டு, தண்ணீர் எடுக்க இனி அவர்கள் வரக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இந்திரா நகர் பகுதி மக்கள் உடைகுளம் கிராமத்திற்கு இரவில் யாருக்கும் தெரியாமல், தண்ணீரை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து சாதிய ரீதியிலான இவ்விவகாரம் காரணமாக இரு கிராமத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்படுமோ என்று அச்சம் நிலவி வரும் நிலையில், குடிநீர் இல்லாமல் மழை நீரையும், அடி குழாய் பைப்பில் வரும் உப்பு நீரையும் அங்குள்ள குழந்தைகள், கற்பிணி பெண்கள் உட்பட முதியோர்கள் வரை பருகுவதால், மழை காலங்களில் தொற்றுநோய் ஏற்படுமோ என்கிற அச்சமும் நிலவி வருகிறது. இது குறித்து முதுகுளத்தூா் ஊராட்சிகள் ஆணையரிடம் கிராமத்திற்கு குடிதண்ணீா் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர பலமுறை மனு வழங்கியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது குடிக்க தண்ணீா் இல்லாமல் கிராமத்தினா் அவதிபடுவதாகவும், சாம்பக்குளம் இந்திரா நகா் மக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகத்ததினா் குடிநீா் பைப் லைன் அமைத்து குடிநீா் வசதி செய்து தர வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.