சென்னை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பலர் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரிகளான மேல்மருத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மாதா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனால்,  அந்த மாணவர்களின் தேர்வை ரத்து செய்த மருத்துவக் கல்லூரி இயக்கம், அந்த கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தும் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அந்த கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற  மருத்துவக் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு தேர்வின்போது இந்தமுறைகேடு நடைபெற்றது தெரிய வந்துள்ளதால், அவர்களின் தேர்வுகளை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  மேலும், அந்த கல்லூரிகள் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு மையமாக செயல்படவும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் தேர்வை மருத்துவப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ள நிலையில், அந்த மாணவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் மமீண்டும் தேர்வை எழுத வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் படிப்பு மேலும் 6 மாதம் தள்ளிப்போகிறது.

இதுகுறித்து கூறிய எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷயன், தேர்வு ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மற்றும் பல்கலைக்கழக சட்டங்களின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த  ஆகஸ்டில் மூன்று தொகுதி மாணவர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட்டன. மாதா மருத்துவக் கல்லூரியில், 25 இரண்டாம் ஆண்டு மாணவர்கள், ஒரு மூன்றாம் ஆண்டு மாணவர் மற்றும் 15 இறுதி ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுதினர்.

சில வாரங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் முறைகேடுகள் குறித்து அநாமதேய மனுவைப் பெற்று விசாரணைக்கு உத்தரவிட்டது. முதல் கட்டமாக, பரீட்சை ஒழுக்காற்றுக் குழு தேர்வின் மூன்று மணி நேர காட்சிகளைப் பார்த்தது. அதில், தேர்வு ஹாலில்,   மாணவர்கள், புத்தகங்கள், காகிதத் துண்டுகள் மற்றும் விடைத்தாள்களை பரிமாறிக்கொள்வது தெளிவாக தெரிய வந்தது. விடைத்தாள் வழங்கப்பட்ட உடனேயே சில மாணவர்கள் மண்டபத்திலிருந்து வெளியேறி கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து திரும்பி வருவதைக் காண முடிந்தது. அப்போது  அவர்கள் நகல் எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளன என்று கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து அங்கு சமீபத்தில் தேர்வு எழுதியுள்ள அனைத்து மருத்துவ மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய அதிகாரி ஒருவர்,   “பரீட்சை விதிகளின்படி இவை அனைத்தும் அனுமதிக்கப்படவில்லை,” இது அந்த கல்லூரிக்கு பெருத்த அவமானம் .. அந்த  கல்லூரிகளைத் தடைசெய்து அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

கல்லூரி நிர்வாகமே, மாணவர்கள் காப்பியடித்து தேர்வு எழுதுவதை ஊக்குவித்து வந்தது தெளிவான நிலையில், அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. . இதனால் அங்கு படித்து வரும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது….

மத்திய மாநில அரசுகள்  என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…