சென்னை:

மிழகத்தில் மொத்தம்  257 கட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் திமுக, அதிமு,க காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற கட்சி என்று அறிவித்து உள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் எவை எவை என்பதை  தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், சுயேச்சை சின்னங்கள் விபரத்தை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், ஆணையத்தன் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 10  என்றும், . அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 247  இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

அங்கீகாரம் பெற்ற கட்சிகள் விவரம்:

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., தேசியவாத காங்கிரஸ் ஆகியவை

பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன. ஆனால், இவர்கள் போதிய வாக்குகள் பெறாத நிலையில் அங்கீகாரத்தை இழந்துள்ளன. இந்த கட்சிகள் தேர்தலில் அதிகாரப்பூர்வ கட்சி ரீதியாக போட்டியிட முடியாது. இவர்கள் அனைவருமே, சுயேச்சையாக கருதப்படுவர்.

கட்சிகள் அங்கீகரிக்கப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையம் Election Symbols (Reservation and Allocation) Order 1968ன்படி தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரக்கின்றது.  அதன்படி தேர்தல் ஆணையத்தால் கட்சிகள் இரண்டு வகையாக அங்கீகரிக்கப்படுகிறது.

1) அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி.
2) அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும்.

மாநில கட்சி அங்கீகாரம் பெற தேவையான தகுதிகள்:

மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.

அதுபோல, மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றி ருக்கவேண்டும்.

மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில்  வெற்றி பெற வெண்டும்.

மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

தேசிய  கட்சி அங்கீகாரம் பெற தேவையான தகுதிகள்:

நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த உள்ள  தொகுதிகளில் 2 சதவீத இடங்களை (11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும்

ஒரு அரசியல் கட்சி  4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும்  10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபந்தனைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. (ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இருந்தது குறிப்பிடத்தக்கது)

இந்தியாவில் தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன. அவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளாகும்.