மும்பை: பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலியின் பதவிகாலம் 9 மாதங்கள் மட்டுமே என்பதால், பிசிசிஐ அமைப்பின் மேம்பாட்டிற்காக அவர் பெரிதாக செய்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அடுத்த தலைவரான செய்தி ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியானபோது, ​​பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலியின் ஆட்சி ஒன்பது மாதங்கள் மட்டுமே நீடிக்கும்.

பி.சி.சி.ஐ தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, கங்குலி ஏற்கனவே வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக இருந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, கங்குலி பிசிசிஐ குழுவில் முதலாளியாக பதவியேற்றம் அடையும்போது அப்பதவியின் காலக்கெடு அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 2018 அன்று, இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன்படி ஒரு நபர் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவிகளை வகித்தால், அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் மூன்று ஆண்டுகளின் “அமைதி கொள்ளும் காலத்திற்குள்“ இருக்க வேண்டும்.

பிசிசிஐ யின் புதிய தலைவர், “அதுதான் சட்டம். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முதல் வகுப்பு கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது முதல் முன்னுரிமை மற்றும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டிலும் என் கவனம் இருக்கும்“, என்று கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது:- “இந்த நியமனத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது பி.சி.சி.ஐ.யின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கும் நேரம், நான் ஏதாவது செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.“