டில்லி
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாள் அக்டோபர் 31ந்தேதி வருகிறது. அன்றைய தினம், படேல் உருவப்படுத்தை காட்சிப்படுத்த வேண்டும் என்று காவல்துறை, பாதுகாப்பு துறைக்கு மத்தியஅரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் முன்னாள் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலை கவுரவிக்கும் வகையில், உலகின் மிக உயரமான சிலையாக பட்டேல் சிலை உருவாக்கப்பட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 31 பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், பட்டேலின் 144ஆவது பிறந்த தினம் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம், நாடு முழுவதும் உள்ள காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை அலுவலகங்களில் படேலின் உருவப்படங்கள், நாட்டு மக்களுக்கு அவர் கூறிய செய்திகளையும் காட்சிப்படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அன்றைய தினம் குஜராத்தில் அமைந்துள்ள படேலின் மிக பிரமாண்டமான சிலை அருகே, மிகப்பெரிய அளவிலான போலீஸ் அணிவகுப்பு நடத்தி மரியாதை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.