சென்னை:
சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளிவரவேண்டும் என்று சர்ச்சைப் புகழ் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இது அதிமுக அதிகார மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்க்கைகுரிய வகையில் பேசி பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எதைப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே எதையாவது பேசி, தமிழக மக்களிடையே காமெடி அமைச்சராக பெயர் பெற்றுள்ளவர் ராஜேந்திர பாலாஜி. ஏற்கனவே அமெரிக்கா சென்றபோது, பசு எப்படி பால் கறக்கிறது என்பதை பார்க்க செல்வதாக கூறி, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். தற்போது சசிகலா விரைவில் சிறையில் இருந்து வர வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா ஆட்சியை கைப்பற்ற நினைத்தபோது, அவருக்கு எதிராக கொந்தளித்த ஓபிஎஸ், அதிமுகவை உடைத்து, தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், உடைந்த அதிமுக இணைந்ததும், முதல்வராக எடப்பாடியும், துணை முதல்வராக ஓபிஎஸ்சும் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்கள் பெயரளவில் இணைந்தாலும் மனதளவில் இணையாமலேயே கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறார்கள். இதன் காரணணமாக, அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓபிஎஸ், சிறையில் இருக்கும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ‘இதுபற்றி தலைமைக் கழகம் ஆலோசித்து பேசி நல்ல முடிவெடுக்கும்’ என்று கூறினார். இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் உள்ள சசிகலா நன்னடத்தை காரணமாக விரைவில் வெளியே வருவார் என்றும், அவர் வந்ததும் அதிமுகவில் இணைவார் என்றும, அதையடுத்து அதிமுகவை கைப்பற்றுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், சர்ச்சைப்புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலா குறித்த கேள்விக்கு, அதிமுகவே ஆட்சி செய்ய வேண்டும் என்ன எண்ணம் கொண்டவர் சசிகலா என்றும், அவர் சிறையில் இருந்து விரைவில் வெளியே வர வேண்டும் என்பதே எனது ஆசை, எனது மனசாட்சியின் கருத்தும் அதுதான் என்று கூறியிருக்கிறார்.
இது அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ராஜேந்திர பாலாஜியின் வாயை கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் முதல்வரும், துணைமுதல்வரும் உள்ள நிலையில், சசிகலா குறித்த ராஜேந்திர பாலாஜியின் பேச்சு, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் உடைவதை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெற்ற சமயம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, டி.டி.வி தினகரன் சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.