சென்னை
இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ ஆகியோர் தமிழக அரசுடன் 5 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர்.
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ இந்தியாவில் பிறந்தவரின் மனைவி என்பதாலும் இந்தியர்கள் பெருமை அடைந்துள்ளதாகக் கூறி வருகின்றனர். இதில் தமிழக மக்களுக்கு மற்றொரு தனிப்பெருமை உண்டு. இது குறித்த விவரங்களை இங்குக் காண்போம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்துல் லதீஃப் ஜமால் வறுமை ஒழிப்பு ஆய்வகம் (ஜேபால்) என்னும் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைத்தார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜே பால் நிறுவனத்தை அபிஜித் மற்றும் அவர் மனைவியுடன் இணைந்து செந்தில் முல்லைநாதன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வகம் மாநிலத்தில் உள்ள சுகாதாரம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கல்வி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலம் மற்றும் சத்துணவு, தொழில் நிறுவனங்கள், மற்றும் விற்பனை வரிகள் ஆகிய துறைகளில் 15 ஆய்வை நடத்தி உள்ளது. தற்போது பானர்ஜி தம்பதியினர் இணைந்து தமிழகத்தின் சமூக பொருளாதார ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் தலைமையில் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஆய்வைத் தவிர இரத்த சோகைக்கான மலிவு வகை உணவு குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இது போல் ஏற்கனவே இவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் பல கொள்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.