விருதுநகர்:

ல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி இன்று  விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது..

மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இவரது வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று  வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.

அப்போது விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த வர்கள் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும் , பெண் காவலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர்.  அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு பரிமளா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். ஆனால், குற்றச்சாட்டுக்களை நிர்மலாதேவி உள்பட 3 பேரும் மறுத்தனர்.

அதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு அன்றைய நாளில் 3 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதும் 8 பிரிவுகளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்தபின் வெளியே வந்த நிர்மலாதேவி சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.