டில்லி
நிதி நிலை நெருக்கடி காரணமாக பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட மத்திய நிதி அமைச்சகம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசு தொலை தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் ஆகியவை கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பி எஸ் என் எல் நிறுவனத்தில் தற்போதுள்ள 1.65 லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுப்பது குறித்து அரசு அறிவித்தது. அத்துடன் இந்த ஊழியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 58 ஆகக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்த்தில் 77% ஊதியமாக வழங்கப்படுவதால் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொலைத் தொடர்புத் துறை இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்த ரூ.76000 கோடி நிதி உதவியை அரசிடம் கோரியது. இவ்வளவு செலவு செய்து துறைகளை மேம்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தயங்குவதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில் இந்த இரு நிறுவனங்களையும் மூடினால் தர வேண்டிய ஈட்டுத் தொகை மட்டும் கடன் தொகை சேர்ந்து ரூ.95000 ஆகும் என அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் நிறுவனத்தை மூடும் போது விருப்ப ஓய்வுக்கான தொகை ஏதும் தர வேண்டிய நிலை இருக்காது. இந்த இரு நிறுவனங்களிலும் மூன்று வகையான ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள், மற்ற பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து மாற்றப்பட்டவர்கள், மற்றும் இந்தியத் தொலைத் தொடர்பு சேவை அதிகாரிகள் ஆவார்கள்.
இந்த நிறுவனங்களை மூட நேர்ந்தால் தொலைத் தொடர்பு சேவை அதிகாரிகள் வேறு துறைகளில் அமர்த்தப்படலாம். நேரடியாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் மிகவும் இளையவர்கள் என்பதால் அவர்கள் ஊதியம் மிகவும் குறைவானதாக உள்ளது. மேலும் அவர்கள் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10% மட்டுமே உள்ளனர். எனவே இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் விருப்ப ஓய்வுத் தொகை அளித்தால் போதுமானதாகும்.
எனவே நிறுவனத்தை மூடும் போது முந்தைய கணக்கின்படி ரூ.95000 கோடி அளவுக்குச் செலவாகாது எனக் கூறப்படுகிறது. எனவே நிதி அமைச்சகம் இவ்விரு நிறுவனங்களையும் மூட நேர்ந்தால் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகையைச் சரியாகக் கணக்கிடும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இது குறைவாக இருந்தால் நிதி அமைச்சகம் இவ்விரு நிறுவனங்களையும் மூடி விடலாம் என விரும்புவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.