விழுப்புரம்
சீன அதிபர் வருகையையொட்டி திபெத் ஆர்வலரும் எழுத்தாளருமான டென்சின் சுண்டூ விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திபெத் பகுதியைச் சேர்ந்த டென்சின் சுண்டூ சென்னை லயோலா கல்லூரியில் பயின்றவர் ஆவார். இவர் திபெத் சுதந்திர ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார். கடந்த 2022 ஆம் வருடம் அப்போதைய சீனத் தலைவர் சூ ரோங்கிஜி இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது டென்சின் சுண்டூ மும்பையில் உள்ள ஒபெராய் ஓட்டலில் 14 ஆம் மாடியில் சுதந்திர திபெத் குறித்த பதாகைகளை அமைத்தததற்காக கைது செய்யப்பட்டார்.
இந்த கைது செய்தி பரவியதும் பல சமூக ஊடகங்களில் இவர் ஆதரவாளர்கள் இவரை விடுதலை செய்யக் குரல் எழுப்பினார்கள். அதன் பிறகு கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இவர் விடுதலை செய்யப்பட்டார், அதிலிருந்து இவர் மீது காவல்துறையின் கண்காணிப்பு இருந்து வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 13 முதல் 15 வரை வருகை தருகிறார்,
அதையொட்டி டென்சிங் சுண்டூ விழுப்புரத்தின் கொட்டகுப்பம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்த கொட்டகுப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் இவரிடம் சுதந்திர திபெத் குறித்த நோட்டிசுகள் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ராமு மணிவண்ணன், “இந்தியா சீனாவுக்காக மிகவும் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அகதிகள் விதிப்படி அவர்கள் அகிம்சை முறையில் அமைதிப் போராட்டம் நடத்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது, திபெத் மக்கள் அவ்வாறு தங்கள் எதிர்ப்பை காட்டுவதில் தவறில்லை. டென்சிங் சுண்டூ பொதுமக்களுக்கு இதுவரை எவ்வித தொந்தரவும் அளிக்கவில்லை என்பதுடன் எந்த ஒரு வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.