டில்லி
அரசு தொலைத் தொடர்பு துறையான எம் டி என் எல் ஊழியர்களுக்கு இன்னும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஊதியம் வழங்கப்படவில்லை.
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனத்தின் ஒரு பகுதி எம் டி என் எல் ஆகும். மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் என்பது சுருக்கமாக எம் எஇ என் எல் என் வழங்கப்படுகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி அன்று ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதில் பி எஸ் என் எல் நிறுவனத்தில் 46,597 அதிகாரிகளும், 1,17,305 ஊழியர்களும் பணி புரிகின்றனர். எம் டி என் எல் நிறுவனத்தில் 22000 பேர் பணி புரிகின்றனர்.
தற்போது அரசு தொலைத் தொடர்புத் துறை மிகவும் நஷ்டத்தில் இயங்குவதால் ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. பி எஸ் என் எல் நிறுவன ஊழியர்களுக்குத் தொடர்ந்து தாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது. சென்ற மாதம் சுமார் 20 தின தாமதம் ஏற்பட்டது. பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு மொத்த ஊதியம் சுமார் ரூ.800 கோடி ஆகும். எம் டி என் எல் ஊழியர்களின் ஊதியம் சுமார் ரூ.160 கோடி ஆகும்.
எம் டி என் எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாதம் கடைசி வாரம் ஜூலை மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத ஊதியம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிர்வாகம் எவ்வித தகவலும் அளிக்காததால் ஊழியர்கள் கடும் கவலையில் உள்ளனர்.
பி எஸ் என் எல் ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து மூன்றாவது மாதமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஊதியத்தைச் சரியான நேரத்தில் வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.