தூத்துக்குடி: சிறிய தோல்விகளுக்கோ அல்லது கவலைகளுக்கோ பெண்கள் தற்கொலை முடிவை நாடக்கூடாது என்றும், துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பேசியுள்ளார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை.
மேலும், வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தானே ஒழிய, வேறு எதற்காகவும் இல்லை என்றும் அவர் உற்சாகமூட்டிப் பேசினார்.
தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக தமிழகம் வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழிசை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது பாரதி விழாவில் அவர் பங்கேற்று பேசியபோதுதான் பெண்கள் ஊக்கமும் உற்சாகமும் கொள்ளும் வகையில் பேசினார்.
பெண்கள் குறித்து பாரதியார் பாடியுள்ள பல வரிகளை மேற்கோள் காட்டிய அவர், “வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளைக் கண்டு அஞ்சி ஓடாமல், அதிலிருந்து நேர்மறை பாடங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் அனைத்துப் பெண்களும் உயர்வான நிலையில் இருக்கிறார்கள் என்று கூற முடியாதுதான். இன்றும் பலர் முன்னேற முடியாத சூழலில் இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.
தம்மை அடக்குவோரை பெண்கள் தலைநிமிர்ந்து எதிர்க்கத் துணிய வேண்டும். சிறிய தோல்விகள் மற்றும் கவலைகளுக்காக பெண்கள் தற்கொலை முடிவை நாடக்கூடாது” என்றார். பாரதியார் விழா என்பதால் முற்றிலும் அதையொட்டியே அவரின் உரை அமைந்தது.