சென்னை: இந்தியாவின் வரலாறு தமிழகத்திலிருந்துதான் தொடங்கப்பட வேண்டுமென்பதை கீழடி அகழ்வாய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பெருமைப்பட கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

மதுரை அருகே வைகை நதிக்கரையில் கீழடி என்ற இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுப் பணிகளை பார்வையிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியுள்ளவற்றின் சுருக்கம் வருமாறு; தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கீழடியில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கிடைத்திருக்கும் பெருமை.

இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகழ்வாய்வில் மத்திய அரசும் மாநில அரசும் முழுமையாக ஈடுபட வேண்டும். இ‍ங்கே கிடைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் தமிழரின் நாகரீகப் பெருமையை பறைசாற்றுகின்றன.

இந்த இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு, இ‍ங்க‍ே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை திமுக கூட்டணி உறுப்பினர்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ளார்கள். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகளையும் தொடர வேண்டும். இந்த அகழ்வாய்வுகள் முழுமையாக நடைபெற வேண்டிய மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தத்தை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார்.