சென்னை:

மிழகம் கேரளா இடையே  உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து கேரள முதல்வருடன் பேச தமிழக முதல்வர்  எடப்பாடி தலைமையிலான குழுவினர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

கேரளா மாநில தலைமையகம் அமைந்துள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் மாலை 3 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கிறது. இந்த பேச்சு வார்த்தையின்போது  பரம்பி குளம் – ஆழியாறு திட்டம், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்தும், நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் தமிழக-கேரள முதலமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கருப்பணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் சாய்குமார் ஆகியோரும் செல்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நதிநீர் பிரச்சனையை பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை பினராயி விஜயனும் ஏற்றுக் கொண்டார்.

இதைதொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேச தேதி முடிவு செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி,  நதிநீர் விவகாரங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் இன்று தாம் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை யில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.