பெங்களூரு: கர்நாடகாவில் தனது துறைக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ய முயன்ற நடவடிக்கைகளை தடுத்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் பொறுப்பில் இருந்தவர் ரோகிணி. தொழிலாளர் நல நிதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சில முறைகேடு செய்ய முயன்றனர். இதனையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அந்தப் பொறுப்பு தொழிலாளர் கமிஷனர் கே.ஜி.சாந்தாராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருப்பவர் அம்மாநில முதல்வர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.8000 கோடி அளவிற்கு நிதியிருப்பு உள்ளது. எனவே, இந்த வாரியத்தின் செலவு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார் ரோகிணி. கடந்த 8 ஆண்டுகளில், இந்த வாரியத்தின் நிதியில் வெறும் ரூ.800 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த தொகையை வேறு வழியில் செலவிட வேண்டுமென்று சில முனைகளிலிருந்து ரோகிணிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நெருக்குதல்களுக்கு அவர் பணியாததால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.