சென்னை:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, அதிகாரிகளுக்கு முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள், வெள்ள நீரை வெளியேற்றுவது,
சுரங்க பாதைகளில் உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்றுவது,
மின் வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது,
பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்க இடங்களை தேர்வு செய்து, தயார் நிலையில் வைத்திருப்பது,
மக்களுக்கு மழை காரணமாக ஏற்படும் தொற்று நோய்களை தடுப்பது, சிகிச்சை அளிப்பது,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு வழங்குவது,
போதுமான உணவு பொருட்கள் கையிருப்பில் வைத்து கொள்வது,
வெள்ளத்தில் யாரேனும் சிக்கி கொண்டால் அவர்கள் மீட்க தயார் நிலையில் மீட்பு குழு அமைப்பது
குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொது மக்களை பாதுகாப்பதற்கும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பொதுப்பணித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலை களையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மருத்துவ முகாம்கள் அமைத்தல், சுத்தமான குடிநீர் வழங்கல், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய் தடுத்திடல், அவசர தேவைக்காக மோட்டார் பம்ப் செட், ஜெனரேட்டர், கையடக்க மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் பருவ மழைக்கு முன்பாக பணிகள் அனைத்தையும் முடிக்கவும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.