சென்னை:

மிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க திருவனந்த புரத்தில் வரும் 25-ந் தேதி கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பின்போது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்ட விவகாரம், பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம்  152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இருந்தாலும், அணையின்  பராமரிப்பு பணிக்கான அலுவலர்கள், பணியாளர்களையும் அணையில் அனுமதிக்க கேரள அரசு மறுத்து வருகிறது. மேலும்,  கடந்த 1970-ம் ஆண்டு போடப்பட்ட பரம்பிக்குளம்–ஆழியாறு ஒப்பந்தம் அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2000ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இந்த விவகாரங்கள தொடர்பாக கடந்த  2004ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவும் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் சென்னையில் சந்தித்து பேசினர். அதன்பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகம் வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேசினார். இரு மாநில பிரச்சினைகளை பேசி தீர்வு காண்போம் என்று செய்தியாளர்களிடம் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) சந்திக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை இருமாநில அரசுகளும் செய்து வருகின்றன. கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணகுட்டி கூறும்போது, ‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரதிநிதிகள் கேரளாவுக்கு வர இருக்கின்றனர். அப்போது இருமாநில அரசுகளுக்கு இடையே தற்போதைய நிலை மற்றும் ஏற்கனவே முன்மொழியப்பட்ட நதிநீர் பங்கீட்டு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். அதிலும் குறிப்பாக பரம்பிகுளம் திட்டம், ஆணைமலை, பாண்டியாறு–புன்னபுழா ஆகியவை குறித்தும் பேச உள்ளோம்.

கடந்த 15 ஆண்டுகளில் இரு மாநில முதலமைச்சர்கள் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இது ஆகும். இது மாநிலத்தில் நடக்கும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது’ என்றும் தெரிவித்து உள்ளார்.