சென்னை:

லோக்சபா தேர்தலின்போது, தன்னை வீழ்த்திய திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில், பாஜகமாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கினார்.

தேர்தல் முடிவில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டிய பின்னரும் கூட புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆரத்தி எடுத்த வர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், இன்றைய விசாரணையின் போது,  கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது, தமிழிசை தெலுங்கான மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கனிமொழி மீதான வழக்கை வாபஸ்பெற முன்வந்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்ததுடன், மனு மீதான விசாரணை அக்டோபர் 14க்கு தள்ளி வைக்கப்பட்டது.