ஹூஸ்டன்
ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வில் ”இனி டிரம்ப் அரசு’ என்னும் முழக்கத்துடன் டிரம்ப்புக்கு மோடி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அமெரிக்க சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்கா வாழ் இந்தியர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு ஹவ்டி மோடி (நலமா மோடி) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக் கொண்டு தொடக்க உரை ஆற்றினார். ஹூஸ்டன் நகரில் உள்ள என் ஆர் ஜி அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் சுமார் 50000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெகுவாக புகழ்ந்துள்ளார். மோடி, “இன்று நாம் இரு பெரும் குடியரசு நாடுகளின் இதயத் துடிப்பைக் கேட்டுள்ளோம். நாம் இந்த இரு நாடுகளின் வலிமை மற்றும் மனிதாபிமான உறவு ஆகியவற்றை இதன் மூலம் உணர்கிறோம். நான் மோடியை முதல் முதலாகச் சந்தித்த போது அவர் என்னை இந்தியாவில் இருந்து வந்த ஒரு உண்மையான நண்பர் என குறிப்பிட்டார். கடந்த சில வருடங்களாக இரு நாடுகளின் நட்பும் மேலும் உயர்ந்து வருகிறது.
டிரம்ப் தனது குடும்பத்தினரை எனக்கு அறிமுகம் செய்தார். நான் எனது குடும்பமான அனைத்து இந்தியர்களையும் அவருக்கு அறிமுகம் செய்கிறேன். இப்போது இந்தியாவில் நள்ளிரவு என்றாலும் உங்களைக் காண ஹூஸ்டன் முதல் ஐதராபாத் வரை, சிகாகோவில் இருந்து சிம்லா வரை, லாஸ் ஏஞ்சலஸில் இருந்து லூதியானா வரை, நியு ஜெர்சியில் இருந்து நியு டில்லி வரை அனைத்து மக்களும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் இங்கு ஆற்றிய தொடக்க உரையின் மூலம் தனது தலைமைப் பண்பு, அமெரிக்காவின் மீதான ஆர்வம், அனைத்து அமெரிக்கர் மீதான கரிசனம் ஆகியவற்றைக் காட்டி தன்னால் மீண்டும் அமெரிக்காவைப் பிரம்மாண்டமாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுவாக்கியது போல் மீண்டும் வலுவாக்குவார். அவர் அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பல சாதனைகள் செய்துள்ளனர். ஆப் கி பார் டிரம்ப் சர்கார் (இனிமேல் டிரம்ப் அரசுதான்)” என உரையாற்றினார்.
[youtube-feed feed=1]