சென்னை:
தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு தேர்விலும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். அதன்படி இந்த ஆண்டு முதல் சிவில் நீதிபதி தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், தேர்வு எழுதிய நீதிபதிகளில் 95 சதவிகிதம் பேர் நெகடிவ் மதிப்பெண் பெற்று பெயிலானது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த பெரும்பாலான மாஜிஸ்திரேட்கள், கீழமை நீதிமன்ற சார்பு நீதிபதிகள், தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாக விடுப்பு எடுத்துக்கொண்டு படித்த நிலையிலும் அவர்கள் பெயிலானது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் மற்றும் மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து, சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி வரும் 23ந்தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிவித்துள்ளார். பயிற்சி பெற விரும்புவோர் பார் கவுன்சில் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் அறிவுறுத்தி உள்ளார்.