சென்னை:

ரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையமும், உயர்நீதி மன்றமும் கருத்து தெரிவித்து உள்ளது.

பொதுவாக ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிலுள்ள பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில்  உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிட்டார். அதுபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்  சின்ராஜ்,  ம.தி.மு.க. வின் கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே கட்சியின் பாரிவேந்தர் ஆகியோரும் உதயசூரியன் சின்னத்திலேயே  போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் எபட்டிருந்தது. அதில்,  தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின்  சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்றும் இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என  கேள்வி எழுப்பினர்.

தேர்தல்களில்,  கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுவதாகத் தெரிவித்த நீதிபதிகள் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என்றும் தெரிவித்தனர்.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  அப்போது ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருப்பதாக  தெரிவித்தார். மேலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டதால், அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம், தி.மு.க., அ.தி.மு.க., அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.