கொழும்பு:

லங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலின் திருமணம் கடந்த 12ந்தேதி நடைபெற்ற நிலையில், நமலின் திருமண வரவேற்பில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

முன்னாள் இலங்கை அதிபரான ராஜபக்ஷேவின்  மூத்த மகன் நமலின் திருமணம் கொழும்பின் வீரகேடியாவில்  நடைபெற்றது. ராஜபக்சேவின் அரசியல் வாரிசாக கருதப்படும் நமலுக்கும்,  பிரபல தொழிலதிபர் மகளுக்கும் கடந்த 12ந்தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்துக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட யாருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுக்கவில்லை. தனது நெருங்கிய சொந்தபந்தங்களை மட்டும் அழைத்து திருமண விழாவை வைத்துக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, பிரமாண்ட திருமண வரவேற்பு வைக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்ஷே. அத்துடன், தனது நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி கொழும்புக்கு சென்று ராஜபக்சேவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டது தெரிய வந்ததுள்ளது.

சுப்பிரமணியசாமியை ராஜபக்சே அழைத்துச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில்,  சமீபத்தில் இலங்கை சென்ற கனிமொழி  ராஜபக்சே  மகன் திருமணத்தில் கலந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், கனிமொழி கலந்துகொண்டது ராஜபக்சே இல்ல திருமணத்தில் அல்ல. சமீபத்தில் இலங்கை கொழும்பு நகரில் இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரு.ரவூப் ஹக்கீம் அவர்களது மகளின் திருமண நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படமே ராஜபக்சே இல்ல திருமணம் என தவறாக பகிரப்பட்டு  வந்ததும் குறிப்பிடத்தக்கது.