லண்டன்: ஆஷஸ் தொடர் இறுதி டெஸ்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவைவிட இதுவரை 382 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் ‍இறுதி டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. முதல் இன்னிங்ஸில் 69 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான டென்லி 94 ரன்களை அடித்து, 6 ரன்களில் சத வாய்ப்பை இழந்தார். பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களை எடுத்து அரைசதம் பதிவுசெய்தார். ஜோஸ் பட்லர் 47 ரன்கள் அடித்தார். வேறுயாரும் சொல்லிக்கொள்ளும் வகையில் பங்காற்றவில்லை.

ஆஸ்திரேலியா தரப்பில், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், பீட்டர் சிடில் மற்றும் மிட்செல் மாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினார்.

எஞ்சியிருக்கும் 2 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான பொறுப்பு முற்றிலும் பேட்ஸ்மென்களின் தோள்களில் வந்து விழும்.