கொல்கத்தா
மேற்கு வங்க முன்னாள் காவல்துறை ஆணையரைச் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்ய அவர் வீட்டை சிபிஐ முற்றுகை இட்டுள்ளது.
சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் சுமார் 4000 கோடி பண மோசடியில் ஈடுபட்டதை அடுத்து சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறது. சிபிஐக்கு மாற்றப்படும் முன்பு இந்த வழக்கை மேற்கு வங்க காவல் துறை ஆணையர் ராஜிவ் குமார் விசாரித்து வந்தார். அப்போது விசாரணை சரிவர நடக்காததால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
தனது விசாரனையின்போது ராஜிவ்குமார் இந்த ஊழல் வழக்கு தொடர்பான பல ஆவணங்களை அழித்தார் என சிபிஐ குற்றம் சாட்டியது. அதையொட்டி அவரைக் கைது செய்ய சிபிஐ முயன்ற போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி கைது செய்ய விடாமல் தடுத்தனர். இந்த நிகழ்வு அப்போது பரபரப்பை உண்டாக்கியது.
சிபிஐ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ராஜிவ் குமாரைக் கைது செய்ய அனுமதி கோரி மனு செய்தது. அதே நேரத்தில் தன்னைக் கைது செய்யக் கூடாது எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் மனு அளித்தார். அதனால் அவரைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு இட்டிருந்தது.
அந்த உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிபிஐ பிறப்பித்திருந்த கைது உத்தரவை ரத்து செய்யவும் உயர்நீதிமன்றம் மறுத்தது. இதையொட்டி ராகுல் குமாரைக் கைது செய்யக் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தை சிபிஐ முற்றுகை இட்டுள்ளது. எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.