லண்டன்: ஆஷஸ் தொடர் இறுதி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு முடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் 294.
பெரியளவில் ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித் 80 ரன்களும், லபுஷக்னே 48 ரன்களும் அடிக்க, அவர்களுக்கு அடுத்து அதிகபட்ச ரன்களாக 25 ரன்களை அடித்தவர் பந்துவீச்சாளர் லயன்.
மேத்யூவாட் 19 ரன்களும், பீட்டர் சிடில் 18 ரன்களும், மிட்செல் மார்ஷ் 17 ரன்களும் அடித்தனர். தொடர்ந்து சொதப்பிவரும் டேவிட் வார்னர் எடுத்த ரன்கள் 5. மற்றொரு துவக்க வீரர் ஹாரிஸ் அளித்த பங்களிப்பு 3 ரன்கள்.
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளும், கரன் 3 விக்கெட்டுகளும் தூக்கினர். வோக்ஸ் தன் பங்கிற்கு 1 விக்கெட் எடுத்துக்கொண்டார்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைவிட 69 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை இங்கிலாந்து எடுத்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் மொத்தமாக 3 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், போட்டி வெற்றி அல்லது தோல்வி என்ற முடிவை நோக்கி செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.