சென்னை: தானியங்கு மழையளவுமானி, தானியங்கு வானிலை மையங்கள், தானியங்கு நீர் அளவு பதிவுமானி ஆகியவற்றை மாநிலமெங்கும் சுமார் 1300 இடங்களில் அமைப்பதற்காக ஒரு தனி ஆலோசகரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.
பருவநிலை மாற்றமானது, வானிலை கணிப்பு செயல்பாட்டை மிகவும் கடினமான ஒன்றாக ஆக்கிவிட்டதால், நாள் மற்றும் மாத அடிப்படையில் களத்திலிருந்து வானிலை தரவுகளை மனித முயற்சியில் சேகரிப்பது சவாலான ஒன்றாக உள்ளது.
இதனால்தான் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசால் நியமிக்கப்பட்டுள்ள அந்த ஆலோசகர், நவம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுமம், இந்த ஆலோசகரை சமீபத்தில் நியமனம் செய்தது. தமிழ்நாடு பலவித இயற்கை சீற்றங்களுக்கு உள்ளாகக்கூடிய மாநிலமாக இருப்பதால், மழைப்பொழிவை அளவிடுவது அவசியமாக இருப்பதால்தான் இந்த ஏற்பாடு என்று கூறப்பட்டுள்ளது.