நடப்பு கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் அரசு மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மறு தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மீண்டும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பே படிக்க வேண்டும் என்றும், இந்த சட்டத்திருத்தம் மார்ச் 1, 2019ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் முன்தேதியிட்டு அரசிதழில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2019 – 2020ம் கல்வியாண்டில் இருந்து 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் 2 தாட்களாக எழுதப்படுவதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக அவை ஒரே தாட்களாக எழுத உத்தரவிடுவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.