சென்னை

திரைப்பட டிக்கட்டுகள் குறித்த சமீபத்திய அரசு அறிவிப்பு பற்றி நெட்டிசன் இட்டுள்ள  பதிவு

சமீபத்தில் திரைப்பட டிக்கட்டுகள் இணையம் மூலம் பதிவு செய்வது குறித்த அரசு அறிவிப்புக்கு நெட்டிசன் சரவணன் சவடமுத்துவின் முகநூல் பதிவு பின் வருமாறு :

தியேட்டர்காரர்களும், டிக்கெட் முன் பதிவு செய்யும் இணையத்தள முதலாளிகளும் சேர்ந்து ஒரு டிக்கெட்டுக்கு முன் பதிவுக்கான கட்டணமாக ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 30 ரூபாயைக் கூடுதலாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் வரும் லாபத்தில் பாதி தியேட்டர்காரர்களுக்கும், மீதி இணையத்தளம் நடத்துபவர்களுக்கும் என்று எழுதப்படாத விதி. இந்த பர்சென்டேஜ் பிரிப்பில் கூடுதலாக யார் கொடுத்தார்களோ அவர்களுடைய இணையத்தளத்துடன் தங்களது தியேட்டரை இணைத்தார்கள் தியேட்டர்காரர்கள்.

இத்தனையாண்டுகளாக கொள்ளையோ கொள்ளையாக அடித்துக் கொண்டிருந்த அவர்களிடத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுப் பார்த்தார்கள். அது சினிமா தியேட்டரின் ஆளுமைக்கு உட்பட்டது. தர முடியாது என்று தியேட்டர்காரர்கள் சொல்லிவிட்டார்கள்.

எனவே அந்தத் தொகை அதிகமாக இருப்பதால்தான் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரவும் யோசிக்கிறது என்று அமைச்சரிடம் சொல்லி இப்போது அதற்கு அரசு உத்தரவாக “எத்தனை டிக்கெட் எடுத்தாலும் 30 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும்…” என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்.

முதலில் இதற்கு அரசுக்கு உரிமையிருக்கிறதா என்று தெரியவில்லை. இணையத்தள முன் பதிவு என்பது இணையத்தளங்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம். அதில் அரசு எந்தவிதத்தில் தலையிட முடியும் என்று தெரியவில்லை.

ஆனால், தியேட்டர் முன் பதிவு வழியாகவும்கூட தியேட்டர் கட்டணங்கள் அரசு விதித்துள்ள கட்டணங்களைத் தாண்டக் கூடாது என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டால்தான் அந்த உத்தரவு செல்லுபடியாகும்.

வெறுமனே மைக்கை நீட்டிவிட்டார்களே.. என்பதற்காகவே அடிமை அமைச்சர் இப்படி அளந்துவிட்டுப் போயிருக்கிறார்..!

அடுத்து தியேட்டர்காரர்கள் இந்த அரச அடிமைகளை நேரில் பார்த்து ஏதாவது “கவனித்துவிட்டால்” இந்த அரசாணையும் வரவே வராது..!

ஆக,. “வரவை” எதிர்பார்த்தே அடிமைகள் கூவியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்..!