சென்னை:

சாலைகளில் அரசியல் கட்சிகளால் வைக்கப்படும், ஃபிளெக்ஸ் மற்றும் பேனர்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலை களில் தேங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்று, தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் சென்னை உயர்நீதி மன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க  சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை  பிறப்பித்தும், தமிழகஅரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக பலியானார்.

இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக  தமிழக தலைமைச்செயலாளர் மீது சமூக ஆர்வலம் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீது இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை யின்போது, இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலைகளில் தேக்கப்பட வேண்டும்? என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்ற நீதிபதிகள், 

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இதுவரை செய்யாத ஒரே விஷயம், மாநில செயலகத்தை ஐகோர்ட்டுக்கு மாற்றுவதுதான்.

பேனர் விவகாரத்தில்எல்லாவற்றையும் நாங்கள் செய்துள்ளோம் என்று தெரிவித்த நிலையில், 

சட்ட விரோதமாக  விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மனிதனின் வாழ்வுக்கு இங்கு ஜீரோ மரியாதைதான் கொடுக்கப்படுகிறது என்ற நீதிபதிகள், . கடந்த ஆண்டு சாப்ட்வேர் என்ஜினீயர் ரகு என்பவர் பேனரால் உயிரிழந்தார். இன்னும் எத்தனை பேர் உயிர்களை எடுக்க காத்திருக்கிறார்கள். எந்த நிகழ்ச்சி என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா?

மாநில அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் நீதிமன்றம் அதை செயல்படுத்த தகுதி யில்லை என்று நினைக் கிறீர்களா? நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது.

இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.