சென்னை:

பொது இடங்கள், சாலைகளில் வைக்கப்படும் அரசியல் கட்சியினரின் ஃபிளெக்ஸ், பேனரால் அவ்வப்போது மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகிறது. இந்த நிலையில், பேனர் தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத  நிலையில், தலைமைச்செயலாளர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் ஃபிளெக்ஸ், பேனர் வைப்பது தொடர்பான விவகாரத்தில், சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதில், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேனர்கள் வைப்பது தொடர்பாக சமூக ஆர்வலம் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு கடந்த 2017ம் ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, பேனர்கள் வைக்க பல்வேறு விதி முறைகளை உயர்நீதி மன்றம் தெரிவித்தது. மீண்டும்  உயர்நீதி மன்றம் பலமுறை விதியை மீறி வைக்கப்படும் பேனர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் அரசும், அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம்  கோவை ஆர்.எஸ் புரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிக்காக அமைச்சர் கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை வரவேற்று சாலையின் குறுக்கே பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இதில் இளைஞர் ஒருவர் மோதி அகால மரணம் அடைந்தார்.

அப்போது, பேனர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதி மன்றம்,  அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா..? ஹெலிகாப்படரில் செல்கிறார்களா?  என்று சாட்டையை சுழற்றியது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுகவினர் வைத்த வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியாகியுள்ளார்.  இது சென்னையில் பெரும் பரபரப்பையும், மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் மீது, சமூக ஆர்வலர் டிராஃபிக் கே.ஆர்.ராமசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.