தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில், வலிமைவாய்ந்த கத்தார் அணியை இந்திய அணி டிரா செய்து அசத்தியது.
வரும் 2022ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளன. இதற்காக, ஆசிய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஓமன் நாட்டிற்கு எதிராக நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. ஆனாலும், துவக்கத்தில் முன்னிலையில்தான் இருந்தது. இந்நிலையில் தனது இரண்டாவது போட்டியில் கத்தாரை சந்தித்தது.
கடந்த 15 ஆண்டுகளாகவே கத்தார் கால்பந்து அணி வலிமையான அணியாக இருந்து வருகிறது. இந்த அணி ஆசிய கால்பந்து சாம்பியனாகவும் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஃப்கன் அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வென்றிருந்தது கத்தார் அணி.
இந்திய – கத்தார் இடையிலான போட்டியில் கத்தார் அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்தியா தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடி போட்டியை டிரா செய்துவிட்டது.
இந்தியாவில் ஒரு கால்பந்து மிருகம் உறங்கிக்கொண்டுள்ளது என்று ஃபிஃபா முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கருத்து தெரிவித்ததை இந்திய அணி உண்மையாக்கி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுவதாய் கால்பந்து பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.