கொல்கத்தா: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
பழைய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்து, புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. இப்புதிய சட்டத்தின்படி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது, “நாங்கள் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை. ஏனெனில், இந்தச் சட்டம் மிகவும் கடுமையாக உள்ளது. ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே எங்களுடைய நோக்கம்.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, அதிலுள்ள சில அம்சங்கள் குறித்து எங்களின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால், மத்திய அரசு எங்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை.
மக்களை பாதிக்கும் ஒரு சட்டத்தை அவர்கள் தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளார்கள். ரூ.500 அபராதம் என்ற நிலையில், அந்த அபராதம் தற்போது ரூ.10000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களால் இதை தாக்குப்பிடிக்க முடியாது.
இந்தளவிற்கான தொகையை அவர்கள் எப்படி சமாளிப்பார்கள்? எனவே, நாங்கள் இந்தச் சட்டத்தை இப்போதைக்கு எங்களின் மாநிலத்தில் அமல்செய்யப் போவதில்லை” என்றுள்ளார்.